சென்னை

திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் பக்தர்களுக்குத் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.  இது மேலும் விரிவாகப்பட்டு ஏற்கனவே ஸ்ரீரங்கம், பழனி ஆகிய இரு கோவில்களில் 3 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.  அது தற்போது மேலும் 3 கோவில்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் ஆகிய கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைச் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினந்தோறும் இந்த திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்ததையடுத்து சமயபுரம் கோவிலில் வாழை இலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், வடை, பாயசம் வழங்கப்பட்டது.

இந்து அறநிலையத்துறை தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.