சென்னை

மிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலைகள்  குறைக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிட்கோ சார்பில் தொழில் மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   அவற்றில் பெரும்பாலான மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன.   இதற்கு இந்த மனைகளின் விலை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மு க ஸ்டாலின்,

“பல ஆண்டுகளாக தொழில் மனைகளின் அதிக விலை காரணமாக ஒதுக்கீடு செய்யப்படாமல் காலி மனைகளைக் கொண்ட தொழிற்பேட்டைகளின் மனைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர் ஒன்றிற்கு ஒரு கோடியே 19 லட்சத்து 79 ஆயிரத்தில் இருந்து 75 சதவீதம் குறைத்து 30 லட்சத்து 81 ஆயிரத்து 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் தொழிற்பேட்டையில் 73 சதவீதமும், நாகை தொழிற்பேட்டையில் 65 சதவீதமும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் குறிச்சி தொழிற்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் தொழிற்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் தொழிற்பேட்டை, ஈரோடு தொழிற்பேட்டையிலும் மனைகளில் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சுமார் 400க்கும் மேற்பட்ட காமனைகளைக் கொண்ட காரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 30 சதவீதம் முதல் 54 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும், மேலும் 12 தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 5 முதல் 25 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.