சென்னை

முன்னாள் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சரான மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நிலை தேறினார்.  அவருடைய வயது மூப்பு காரணமாக அவர் அரசியலில் இருந்து விலகி அவரது தண்டையார்பேட்டை இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தார்.

சுமார் 80 வயதாகும் அவர் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.   அவரது உடல்நிலை  மிகவும் மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இன்று பிற்பகல் 3.42 மணிக்குச் சிகிச்சை பலனின்றி மதுசூதனன் உயிர் இழந்தார்.

இதையொட்டி அவருக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு க  ஸ்டாலின், “அ.தி.மு.க அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.இ. மதுசூதனன் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க.வில் முன்னாள் முதலமைச்சர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்.

அ.தி.மு.க.வின் அவை தலைவராக பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடி தலைவரை அ.தி.மு.க. இழந்திருப்பது பேரிழப்பாகும். இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

சாதாரண தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாகப் பழகியவர். ஏழை – எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அ.தி.மு.க.விற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த திரு. மதுசூதனன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.