சென்னை:
ல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும்  செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி,  முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல்,  தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு  மாணாக்கர்களக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதியாண்டின் செமஸ்டர் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
ஆனால், மாணவர்கள், கல்வியாளர்கள், இறுதி செமஸ்டர் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.