சென்னை
தமிழகத்தில் நிகழும் போராட்டங்கள் குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் ஆகியவைகளுக்காக போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வருகிறது. நேற்று இது குறித்து பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் ஆளுநர் சந்தித்துள்ளார்.
இன்று மாலை சுமார் 7.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தார்கள். இன்று ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அமைச்சர் ஜெயகுமாரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டார்.
சந்திப்பு முடிந்த பின் முதல்வர் செய்தியாளர்களிடம், ”தமிழகத்தில் நிகழும் போராட்டங்களின் நிலை குறித்து ஆளுனர் எங்களிடம் கேட்டறிந்தார். அதற்காகவே அவர் எங்களை அழைத்திருந்தார். நாங்களும் போராட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தோம். எங்கள் விளக்கங்கள் திருப்தி அளித்ததாக ஆளுநர் தெரிவித்துள்ளார்” என கூறி உள்ளார்.