திருச்சி :

 ‘ஊழலை ஒழிப்பதே கட்சியின் முதல் வேலை” என்றும்  உடல் நலமும், மகளிர் நலனும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள்’ என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

நேற்று திருச்சியில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை கமல்ஹாசன் விளக்கினார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

“ உடல் நலமும், மகளிர் நலனும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள். விவசாயம், நீர் வளம், பாசனப்பரப்பு ஆகியவை செயல்படுத்த முழு வீச்சில் பணிகள் செய்வோம். காவிரி நீரை பெறுவோம். அது நம் உரிமை. அதே நேரத்தில் தமிழகத்தில் நீர் மேலாண்மையை தீவிரப்படுத்துவோம். மழை நீரை சேமிக்க சிறு, சிறு அணைகள் கட்டப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். சொட்டு நீர் பாசனம், தெளிப்பான் பாசனம், நவீன பாசன முறைகளை செயல்படுத்துவோம்.

திறன் மேம்பாட்டு வாரியங்கள் அமைக்கப்படும். தொழில் வளத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். லோக் ஆயுக்தா அமைக்கப்படும். 69 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக ஏற்கிறோம்.  விவசாயத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பை சிறு தொழில்களாக உருவாக்கி தருவோம்.

தொழிற்சாலைகளுக்கு மய்யம் எதிரானது இல்ல. தவறு செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதைத்தான் எதிர்க்கிறோம்.

தமிழக காவல் துறையின் திறமை எவருக்கும் குறைந்தது அல்ல. வி.ஐ.பி., பந்தோபஸ்துக்கு காவல்துறையை பயன்படுத்தாமல், சட்டம் ஒழுங்கை காக்க மட்டும் பயன்படுத்தப்படும். காவல் துறையை சீரமைக்க வாரியம் அமைக்கப்படும்.

பல கோடிகளை லஞ்சம் கொடுத்து துணை வேந்தர் பதவியை பெறுபவர்கள் தேச துரோகிகள். ஆசிரியர்கள் நேர்மையாக இருந்தால் கல்வி நேர்மையாக இருக்கும்.

திரைத்துறையல் நான் அரசியல் செய்வதில்லை; அரசியலில் நடிக்கமாட்டேன்.

ஒரு அமைச்சர் என்னைப் பற்றி தொடர்ந்து பேசி சம்பளம் வாங்காத செய்தித் தொடர்பாளராக செயல்படுகிறார்.

இன்னும் இரு வாரங்களில் மய்யம் மொபைல் ‘ஆப்’ அறிமுகம் செய்யப்படும். .கட்சிக்கு என்று தனி ‘டிவி’ சேனல் தேவை என மக்கள் நினைத்தால் அதை நோக்கி நகர்வோம்” என்று கமல்  தெரிவித்தார்.

 

.