சென்னை:

ரூ1 லட்சம் சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம். இதன்படி, ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர்களின் சொத்து வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதை ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்த்தி உள்ளது தமிழக அரசு.

அதன்படி,  ரூ1 லட்சம் சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றவும் தமிழக அரசு  நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் முதல்வர் எடப்பாடி தெரிவித்து உள்ளார்.

முதியோர் உதவித் திட்டம்:

கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ. 1000- வீதம் வழங்கப்படுகிறது

ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச்சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயதுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்பைடயாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவைப்படுகிறது. ஏனெனில் வயது சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் வயது நிரம்பாத தகுதியில்லாத பலர் அரசின் இச் சலுகையை பெற வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு.

இந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.