சென்னை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தை சரியான முறையில் கையாண்ட அம்மாவட்ட துணை ஆணையர் மயில்வாகனனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னை, கோவை, மதுரை, சேலம், உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை, மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தின் போது சமூக விரோதிகளால் வன்முறை வெடித்தது.
இதனால் கலவரம் மூண்டதில் சென்னை நகரம் போர்க்களமாக மாறியது.
இதனால் 7 நாட்களாக அமைதி வழியில் நடைபெற்ற போராட்டம் இறுதியில் வன்முறையில் முடிந்தது.
அதேபோல் மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்தியவர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அப்போது தடியடியும் நடத்தப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் பெரியளவில் போராட்டம் நடந்த திருச்சியில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக, நட்புடன் கட்டித்தழுவி அன்புடன் முடித்து வைக்கப்பட்டது.
இதற்கு காரணம் மாநகர காவல் துணை ஆணையர் மயில் வாகனன்.
போராட்டம் தொடங்கிய நாளில் இருந்தே திருச்சி போலீசார் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடந்துவிடக்கூடாது என்பதில் உஷாராக இருந்தனர்.
இரவு பகலாக போராடிய மாணவர்களுடன் திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன், ஆரம்பம் முதலே சுமூகமான போக்கையே கடைபிடித்து வந்தார்.
அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் யார் மீதும் வழக்குப்பதியப்படாது என்பதை உறுதியாகச் சொன்னார் மயில்வாகனன்.
போராடிய மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வழி செய்தார்.
காவல்துறை மெரினாவில் தாக்கியதாக வீடியோ வைரலானபோது, அதுபோலியான வீடியோ என போராட்டக்காரர்களுக்கு விளக்கியதோடு,
காவல்துறை உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் பயப்படவேண்டாம் என்பதையும் உறுதியாக தெரிவித்தார்.
சென்னை மெரினாவிலும் மதுரை அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மாணவர்களை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும்போது கூட அமைதியாகவே சரியாக நடந்து கொண்டார்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இதன் விளைவாக போராட்டம் முடிவுக்கு வந்த இறுதி நாளில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை சிறப்பான முறையில் கையாண்டதற்காக அம்மாவட்ட காவல் துணை ஆணையர் மயில்வாகனனை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றமும் மயில்வாகனனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிறு அசம்பாவிதங்கள் கூட ஏற்படாமல் பார்த்துக்கொண்டதற்காக பலரும் மயில்வாகனனை பாராட்டி வருகிறார்கள்.
அவரது அணுகுமுறைக்கு பொது மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.