சென்னை: 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கடைகள் அனைத்தும் பெரிய கடைகள் என்றும் அவை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வதுஅலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இரவு ஊரடங்கு, ஞாயிறு தளர்வில்லா முழு ஊரடங்கு ஆகியவை ஏப்ரல் 20ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. ஏப்ரல் 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.
அந்த கட்டுப்பாடுகளின்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதே போன்று பெரிய கடைகள் (Big Format Shops), வணிக வளாகங்கள் (Shopping Malls) மூடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
ஆனால் பெரிய கடைகள் என்று எப்படி வரையறை செய்வது என்ற குழப்பம் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் எழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக தலைமை செயலாளருக்கு ஆட்சியர்கள் கடிதமும் எழுதி இருந்தனர்.
இந் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி 3000 சதுர அடி பரப்பளவு மற்றும் அதற்கு அதிகமான பரப்பளவு கொண்ட கடைகள் அனைத்தும் பெரிய கடைகள் (Big Format Shops) என்று வரையறுக்கப்பட்டு உள்ளதாகவும், அவை கொரோனா புதிய கட்டுப்பாடுகளின் படி மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.