சென்னை

மிழக அரசு பதிவுத் திருமணத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து அனைத்து திருமணப் பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணத்தை பதிய செய்ய மணமக்கள் சென்றுள்ளனர்.   அவர்கள் திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதால் திருமணம் பதிவு செய்ய அப்போது நேரம் இருக்காது எனவும் அதனால் முன் கூட்டியே பதிய வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.  ஆனால் அலுவலகத்தில் அவர்கள் தங்கள் பெற்றோரை குறிப்பாக தந்தையை அழைத்து வர வேண்டும் என கூறியதால் இருவரும் தத்தம் தந்தைகளை அழைத்து வந்து திருமணம் பதிவு செய்தனர்.

அலுவலகத்தில் இது குறித்து அவர்கள் விசாரித்த போது அரசின் சுற்றறிக்கையினால் தற்போது இவ்வாறு கேட்பதாக தெரிவித்தனர்.   இந்த அரசின் சுற்றறிக்கையில் திருமணம் பதிவு செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று ஆதார் அட்டை  மணமக்கள், அவர்கள் பெற்றோர்கள் மற்றும் சாட்சிகளுக்கு அடையாளமாக அளிக்கப்பட வேண்டும்.  இரண்டாவது மணமக்களின் பெற்றோர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் கையொப்பங்கள் விண்ணப்பத்தில் இடப்பட்டு  அவை அடையாள அட்டையுடன் சரி பார்க்கப் பட வேண்டும்.  மூன்றாவது பெற்றோர்களில் ஒருவர் மரணமடைந்ததாக விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்களின் ஒரிஜினல் மரண சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோர் சம்மதமின்றி திருமணத்தை பதிய முடியாது என்பது தெளிவாகி உள்ளது.    மேலும் இந்து திருமண சச்சத்தின்படி பெற்றோர்கள் சம்மதம் இன்றி திருமணம் செய்ய முடியாது என தெரிய வருகிறது.   இந்த சுற்றறிக்கை நேரடியாக அதை சொல்லவிலை எனினும்,  அதில் உள்ள கட்டுப்பாடுகள் அதையே குறிக்கின்றன.    ஆனால் அவர்கள் தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் தெரிவிக்க விரும்பாத திருமணப் பதிவு அலுவலர் பெற்றோர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளதை அடுத்து அரசு இந்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.