சென்னை:
தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, “அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சாதனைப் படைத்து வருகிறது. அ.தி.மு.க.வை, ஆட்சியை விமர்சிப்பவர்கள் தங்கள் வீட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்.ஜி.ஆர். உள்ளது. சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தன; அந்த முயற்சி தவிடுபொடியாக்கப்பட்டது. பிரிந்த பின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அ.தி.மு.க.தான். இன்று நான் முதல்வராக இருக்கலாம்; ஓ.பி.எஸ். முதல்வராக இருக்கலாம்; நாளை தொண்டர்களில் ஒருவர் முதல்வராகலாம். அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துப் போவார்கள்.

தமிழ் மண்ணை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி அ.தி.மு.க. மட்டுமே. சாதாரண தொண்டனுக்கும் கதவை தட்டி பதவி வழங்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளன. சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3,000 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலை மாறி தற்போது 19 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியது. குடிமராமத்து பணிகள் செய்துள்ளதால் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அப்போது மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் செய்தது என்ன? புயல், மழை ஏற்பட்டபோது நாம் புயலை விட வேகமாக செயல்பட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். கரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் மட்டுமே. நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.