சென்னை:
திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி.,”அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், தமிழகத்தை வழிநடத்திய ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் இல்லாததால் சிலர் இடையில் வந்து இதைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள்தான் தேசிய கட்சிகளை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. சிலர் சூழ்ச்சி செய்து உள்ளே வர பார்க்கின்றனர்; இதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை; எந்த கட்சிக் கூட்டணிக்கு வந்தாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. திராவிட இயக்கத்துக்கு சொந்தக்காரர் கலைஞர் அல்ல. அ.தி.மு.க.வில் அரசியல் வாரிசு இல்லை” என்றார்.