சென்னை:
எம்.எல்.ஏ.க்கள் அரசு மீது குற்றச்சாட்டு கூறும்போது, அமைச்சர்கள் குறுக்கிடுவதை தவிர்க்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

பட்ஜெட்டின் மீதான 3வது நாள் விவாதத்தில் பங்கேற்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி, தனது தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, குளம்-அணை தூர்வாருவது, முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு பிரச்சனைகளை பேசினார்.
இதற்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் குறுக்கிட்டு பதில் அளித்தனர்.
மந்திரிகள் குறுக்கிடுவதற்கு  துரைமுருகன் (தி.மு.க.) ஆட்சேபம் தெரிவித்தார். இதற்கு நிதித்துறை அமைச்சர்தான் பதில் கூற வேண்டும். இப்படி மற்ற அமைச்சர்கள் விரிவாக பதில் கூறினால் நாங்கள் எப்படி பேசுவது என்றார்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி:- துறை அமைச்சர்தான் பதில் தருகிறார்கள். உங்கள் ஆட்சியில் எப்படி பதில் கூறினீர்களோ அதே போல்தான் நாங்கள் இப்போது பதில் அளிக்கிறோம்.
துரைமுருகன்:- உறுப்பினர்கள் பேசுவதை குறித்து வைத்துக்கொண்டு கடைசியில் பதில் சொல்லுங்கள் அதுதான் முறை.
சபாநாயகர்:- அமைச்சர்கள் பதில் சொல்வதை தவிர்க்க முடியாது. அவர்கள் உரிய பதிலை சொல்லத்தான் செய்வார்கள்.
மு.க.ஸ்டாலின்:- குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல அமைச்சர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் கோரிக்கை வைத்து பேசும்போது அதற்கு கடைசியில் தான் பதில் கூறுவது முறையாகும்.
சபாநாயகர்:- அமைச்சர்கள் விளக்கம் சொல்வதை தவறு என கூற முடியாது.
இவ்வாறு விவாதம் நடந்தது.