டெல்லி:  மாநிலங்களவையில், அவை விதிகளை மீறி அநாகரிகமாக நடந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) எம்.பி. டெரிக் ஓ பிரையனை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து, ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ந்தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவைகள் முடக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அவை தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது,  ராஜ்யசபாவில் உள்ள டிஎம்சி எம்பி டெரெக் ஓ பிரைன், அவை விதிகளை மீறி செயல்பட்டதால், அவருடைய அலாதியான நடத்தைக்காக” தற்போதைய பாராளுமன்ற கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்து ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக,  ராஜ்யசபா  அவைத் தலைவர் பியூஷ் கோயல், ” டெரெக் ஓ பிரைன்  சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்ததற்காகவும், நாற்காலிக்குக் கீழ்ப்படியாததற்காகவும், சபையில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும்” அவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். இந்த தீர்மானத்தை ஏற்று அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.