கொல்கத்தா

மேற்கு வங்க சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான சோனாலி குஹா பாஜகவில் இருந்து மீண்டும் திருணாமுல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

பல திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்குச் சென்றனர்.   அதனால் பாஜக மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.  இவ்வாறு பலரும் மாறியதால் மேற்கு வங்க ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

ஆனால் தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெற்று மீண்டும் மேற்கு வங்க ஆட்சியைப் பிடித்தது.   இதையொட்டி பாஜகவுக்குச் சென்ற பல திருணாமுல் கட்சியினர் என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர்.   இவ்வாறு கட்சி மாறியவர்களில் சோனாலி குஹா என்னும் பெண் சட்டப்பேரவை உறுப்பினரும் ஒருவர் ஆவார்.

சோனாலி நான்கு முறை தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார்.  இவர் தேர்தலுக்கு முன்பாக திருணாமுல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  கட்சி மாறிய பலருக்கும் தேர்தல் வாய்ப்பளித்த பாஜக இவருக்குத் தேர்தல் வாய்ப்பு அளிக்கவில்லை.  இதையொட்டி அதிருப்தி அடைந்த சோனாலி மீண்டும் திருணாமுல் கட்சி மாற முடிவு எடுத்து முதல்வர் மம்தாவுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

சோனாலி தனது கடிதத்தில், “மிகவும் மனம் உடைந்து நான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.  ஏதோ உணர்ச்சிவசப்பட்டு  மற்றொரு கட்சியில் இணையும்  தவறான முடிவை எடுத்து விட்டேன்.  மீனால் தண்ணீரின்றி வாழ முடியாது என்பது போல் என்னால் நீங்கள் இன்று வாழ முடியாது தீதி(அக்கா).   என்னை நீங்கள் மன்னித்து என்னை மீண்டும் கட்சிக்கு வர அனுமதியுங்கள்.  இல்லையெனில் என்னால் வாழ முடியாது” எனக் கூறி உள்ளார்.

மம்தா பானர்ஜி இதுவரை இந்த கடிதத்துக்கு பதில் அளிக்கவில்லை.