திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், திருமால்பூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.
ஹரியாகிய திருமாலும், ஹரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருமால்பேறு என்னும் திருமால்பூர் என்னும் திருநாமத்துடன் சிறப்புற்று விளங்குகிறது.
மனக்கவலை போக்கும் மகேசன், இங்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரில் கோவில் கொண்டருள்கிறார். ஹரிசக்ரபுரம், வில்வாரண்யம், உத்திர காஞ்சி என்றெல்லாம் போற்றப்பட்ட இத்தலத்தில் பழம்பாலாறு என்னும் விருத்தக்ஷீர நதிக்கரையில் அன்னை பார்வதிதேவி செம்மண்ணால் லிங்கம் பிடித்து வழிபட்டு வந்தாள். ஒரு சமயம் நதியில் வௌ்ளம் பெருக்கெடுக்க, அம்பாள் லிங்கமூர்த்தியை ஆலிங்கனம் செய்தாள். அப்போது அம்பாளின் முத்துமணி மாலை ஐயனின் கழுத்தில் அழுத்த, மணி பதிந்த கண்டம் (கழுத்து) உடையவர் மணிகண்டீஸ்வரர் ஆனார்.
ஹரியும் ஹரனும் ஒன்றே. (அதனால்தான் சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணுஹு, விஷ்ணுஸ்ச ஹ்ருதயம் சிவஹ என்பர்). அவர்களது லீலைகளையும் திருவிளையாடல்களையும் பாமரர்களான நம்மால் புரிந்துகொள்வது கடினம்.
ஆதியில் காஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த மன்னன் குபனும், முனிவரில் சிறந்தவரான வஜ்ஜிர தேகம் கொண்ட ததீசி முனிவரும் நீண்ட நாட்களாக நட்புடன் இருந்து வந்தனர். ஒரு சமயம் மன்னன் குபனுக்கும் (பிருகு முனிவர் குலத்துள் தோன்றி விளங்கிய சிறப்பினையுடைய) ததீசி முனிவருக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
(அரசனோடு நீங்கற்கரிய நட்புப்பூண்டு மிக்குக் கலந்து பொருந்தியிருக்கும் காலத்தோர் நாளில் இருவரும் இன்பப் பொழுது போக்கில் இவ்வாறு கூறுவர். அந்தணர் பெரியரோ? அரசர் பெரியரோ என்னும் வினாவை எழுப்பிய பொழுது அந்தணர் அரசரினும் சிறந்தோரென்று ததீசி முனிவர் கூறக் கேட்ட அரசன் அரசரே சிறந்தோர் என்று கூறினன். இம்முறையில் இருவருக்கும் மனக்காழ்ப்பு உண்டாகிப் பெரும்போர் மூண்டது. முனிவன் நெருப்புப்போலச் சினங்கொண்டு அடித்தனன்; அடித்த அளவிலே மென்மை பெற்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையை அணிந்த குபன் வச்சிராயுதத்தைச் சுழற்றி வீசிப் பழைய மறைகளை உணர்ந்த முனிவரன் உடம்பை இரு துண்டுபட வெட்டி வீழ்த்த அம்முனிவன் உரிமை பூண்ட சுக்கிரனை நினைந்து கீழே நிலத்தில் வீழ்ந்தனன். சுக்கிரன் முனிவர் நினைவை உணர்ந்து வந்து துணிபட்ட உடம்பைப் பொருத்திச் சேர்த்து அப்பொழுதே ததீசி முனிவரை உயிர்பெறச் செய்தார்).
மன்னன் குபனுக்கும் வாக்குவாதத்தினால் எதிர்ப்பு உண்டாகி, அது போராக மாறியது. குபன் தன்னால் இயன்றவரை ததீசியிடம் போரிட்டு, கடைசியில் பலம் குறைந்தான். குபன் தனது உற்ற தெய்வமான ஸ்ரீமந்நாராயணரை வேண்டினான். திருமால் அவன் சார்பாக போர்க்களம் புகுந்து, ததீசியின் மேல் சக்கராயுதத்தை ஏவினார். ஆனால் ததீசியின் உடல் வஜ்ஜிரத் தன்மைக் கொண்டதால் மகாவிஷ்ணு ஏவிய சக்கரம் அவனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அது சிதைந்து போனது.
இதனால் திடுக்கிட்ட திருமால், தேவர்களைக் கூப்பிட்டு ஆலோசித்தபோது சிவபெருமான் ஜலந்தர அசுரனை வதைக்க சுதர்சன சக்கரம் ஏற்படுத்தியதை அறிந்தார். உடன் பூவுலகு வந்தார். குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த தலமான கோவிந்தவாடி அகரம் வந்து, சைவராய் மாறி, சிவதீட்சை பெறுகிறார். பின் பாலாற்றங்கரையில் தென்பால் அம்பிகை செம்மண்ணால் பிடித்து வழிபட்ட லிங்கத்தை செந்தாமரை மலர்களால் ஒரு திருநாமத்திற்கு ஒரு மலரென ஆயிரம் திருநாமங்களுக்கு ஆயிரம் மலர்களால் நித்தமும் பூசனைப் புரிந்தார் புருஷோத்தமர்.
ஒருநாள் அர்ச்சனையின் முடிவியல் ஒரு செந்தாமரை மலரை மறைத்தருளினார் மகேசன். 999 நாமங்களுக்கு 999 மலர்களை சமர்ப்பித்த கோவிந்தன், ஒரு மலரினைக் காணாமல் திடுக்கிட்டார். ‘அர்ச்சனையை முடித்தாக வேண்டும் என்ன செய்வது?’ என்று திகைத்த அடுத்த கணம் தனது வலது கண்ணையே பெயர்த்து மலராக பாவித்து, ஈசனது திருப்பாதங்களில் சமர்ப்பித்தார். அதனால் கண்ணப்பருக்கும் முன்னவர் ஆனார் திருமால்.
தாமதிக்காத ஈசன், நீண்ட செம்மேனியராய், பேரொளிப் பிரகாசமாய் திருமாலுக்குக் காட்சி தந்து, சுதர்சனமென்னும் அற்புத சக்கரத்தை திருமாலுக்கு அருளினார். (இந்த சுதர்சன சக்ரமே திருமாலின் பஞ்சாயுதங்களில் முதன்மையானது ‘சுதர்சன சக்ரம்’. இந்த சக்ராயுதத்தைக் கொண்டே பரந்தாமன், கஜேந்திரன் என்னும் யானை, மன்னன் அம்பரீக்ஷன் ஆகியோரைக் காத்தருளினான்). அதோடு, இழந்த கண்ணையும் வழங்கி, ‘இது முதல் நீர் செந்தாமரைக் கண்ணன் (பத்மாக்ஷன்) என்று போற்றப்படுவாய் நீர் மெய்யன்போடு வழிபட்ட இந்தப் பதி ‘திருமாற்பேறு‘ என்று வழங்கப்படும். இத்தலத்தில் ஒரு நொடிப் பொழுது தங்கியவருக்கும் எல்லா நலன்களும் கிட்டும்‘ எனக் கூறி, மூன்று உலகங்களை காத்து ரட்சிக்கும் வரத்தையும், அத்துடன் இத்தலத்தில் ஒரு நொடிப் பொழுது தங்கியவருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவதலங்களையும் தரிசித்த புண்ணியத்தையும் அவருக்கு வழங்கி அருள்புரிந்தார் அரனார். அது முதல் இவ்வூர் திருமாற்பேறு என்று போற்றப்படுகிறது.
மேலும் அவர் திருமாலிடம், “நீ கூறி வழிபட்ட ஆயிரம் திரு நாமங்களால் என்னை பூசிப்பவர்களுக்கு முக்தியைக் கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்” என்று கூறி அருளினார்.
பெருமாள் வணங்கி, சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தினசரி மூன்று கால பூஜைகள் நடந்திடும் இவ்வாலயம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து சிவாலய விசேஷங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன.