தூத்துக்குடி: திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. கடைசி நாளான 30ந்தேதி சூரசம்ஹாரமும், 31ந்தேதி திருக்கல்யாணமும்  நடைபெற உள்ளது.

அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா உலகப்புகழ் பெற்றது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து ஆற்றல், தன்வயமுடைமை,  இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில்  பக்தர்கள் விரதம் இருந்து முருகனை தரிசனம் செய்கின்றனர். இதனால், தம்மை பிடித்த பீடைகள், கஷ்டங்கள் விலகுவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கந்த சஷ்டி விழா உலகம் முழுவதும் உள்ள எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, பக்தர்கள் 6 நாட்கள் விரதமம் இருப்பது சிறப்பு. விரதம் இருப்பவர்கள், ஒருவேளை உணவு உண்டும்,  சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை  பாராணயம் செய்கின்றனர். இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த  சஷ்டி குறித்த பழமொழியாகும். இந்த விரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.

நடப்பாண்டு கந்த சஷ்டி விழா திருச்செந்தூா் கோயிலில் அக்டோபர் 25ஆம் தேதி தொடங்குகிறது. 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் கடைசி நாளான 30ஆம் தேதி செந்தூர் கடற்கரையில், அரக்கனை சூரனை எம்பெருமான் முருகன் வதம் செய்யும்  சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, முதல்நாளான  அக்டோபர்  25ஆம் தேதி கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதா் யாகசாலைக்கு புறப்படுதலைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.

 2ஆம் நாள்முதல் 5ஆம் நாள்வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

வது நாளான, கடைசி நாளான அக்டோபர்  30ஆம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

இதைத்தொடர்ந்து,   31ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அன்றைய தினம்  அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.