தூத்துக்குடி:

றுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 20) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும்ஆவணித் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்களின் அரகரா கோஷத்திற்கிடையே கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக இன்று  அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 க்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருவிழா கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற ஆக. 29-ம் தேதி நடைபெறுகிறது.

மாலையில் அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு, திருவீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆக. 24-ஆம் தேதி (சனிக்கிழமை) மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையை தொடர்ந்து, சுவாமியும் அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

ஆக. 25ஆம் தேதி காலையில் கோ ரதம், இரவில் வெள்ளி ரதம் வீதி உலா, ஆக.26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி, பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சப்பரம் வந்து சேர்வார்.  அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும்.

ஆக. 27ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கிறார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புத் தீபாராதனையை தொடர்ந்து, 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேர்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஆக. 29 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும்.

திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளையும்  காண கீழே உள்ள பிடிஎப் பைலை டவுன் லோடு செய்யுங்கள்

AVANI THIRUVIZHA 2019 card