அகர்தலா:

பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து, 6 மலைவாழ் கட்சிகள் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர்.


குடியுரிமைச் சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது கடந்த வாரம் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 6 இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
இதனைக் கண்டித்து 6 மலைவாழ் கட்சிகள் நேற்று திரிபுரா மாநிலத்தில் 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

ந்த துப்பாக்கிச் சூடு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடாக தரவேண்டும் என்றும் 6 கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது பாஜக தலைமையிலான அரசின் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், இன்றைய 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.