மைசூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த திப்பு சுல்தானின் வாள் லண்டனில் உள்ள பான்ஹம்ஸ் ஏல மைய்யத்தில் ரூ. 140 கோடிக்கு ஏலம் போனது.
18 ம் நூற்றாண்டின் இணையற்ற போர் வீரனாக விளங்கிய திப்பு சுல்தான் 1775 முதல் 1779 வரை மராட்டிய வீரர்களுடன் பல்வேறு போர்கள் புரிந்துள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த திப்பு சுல்தான் 1799 ம் ஆண்டு நடைபெற்ற போரில் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்.
திப்பு சுல்தான் மரணத்தை அடுத்து அவரது அரணமனைக்குள் நுழைந்த பிரிட்டிஷ் கூலிப்படை அங்கிருந்த பொருட்களைக் கைபற்றிச் சென்றது.
அதில் திப்பு சுல்தான் படுக்கையறையில் இருந்த வாள் ஒன்றை கைப்பற்றிய படையினர் அதை பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பைர்ட்டுக்கு வழங்கினர்.
வேலைப்பாடுடன் கூடிய மிகவும் மதிப்புமிக்க இந்த வாள் பான்ஹம்ஸ் ஏல மைய்யத்தில் ஏலத்திற்கு வந்தது. இரண்டு நபர்களிடையே இந்த வாளை வாங்க கடும் போட்டி நிலவியதாகவும் கடைசியாக ரூ. 140 கோடிக்கு இந்த வாள் ஏலம் போனதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘மைசூர் டைகர்’ என்று வர்ணிக்கப்படும் திப்பு சுல்தான் மைசூரை பொருளாதாரத்தில் சிறந்த நகரமாக நிர்மாணித்தார், மைசூரில் பட்டு உற்பத்திக்கு காரணமான இவர் போர் களத்தில் ஏவுகணைகளை பயன்படுத்தினார் என்று தனது இணையதளத்தில் திப்பு சுல்தான் குறித்து பதிவிட்டுள்ளது பான்ஹம்ஸ் ஏல நிறுவனம்.