வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.03.2022 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழக அரசு அமைத்த ஆணையத்தின் காலக்கெடு ஏப்ரல் 11ம் தேதி முடிவடைந்த நிலையில் ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு இந்த வாரம் ஆணையிட்டிருக்கிறது.
10.5 % சதவீத ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் இதுவரை இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததைக் கண்டித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், வரும் மே மாதத்திற்குள் உள்ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றும் அதன்மூலம் வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 42 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டங்களின் பயனாக கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது என்றும் வன்னியர் இடஒதுக்கீடு குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், “2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அவசர கோலத்தில் 10.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டதால் தான் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.