டாஸ்மானியா மாநில கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த விவகாரம் பெரிதானதால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டிம் பைன்.

டிசம்பர் மாதம் 8 ம் தேதி இங்கிலாந்து அணியுடனான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் டிம் பைனின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிம் பைன் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் 11 ல் வெற்றி பெற்றிருக்கிறார்.

2019 ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியை வென்று ஆஷஸ் தொடரை கைப்பற்றிய டிம் பைன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2020 ல் தொடரை தக்கவைத்து கொண்டது.

இந்நிலையில், 2021 ஆஷஸ் தொடர் நெருங்கும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கேப்டன் பதவியை ராஜினாமா செய்தபோதும் அணிக்காக தான் தொடர்ந்து விளையாட இருப்பதாக கூறியிருக்கும் டிம் பைன் 2017 ம் ஆண்டு டாஸ்மானியா மாநில கிரிக்கெட் சங்க பெண் ஊழியருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

2017 ம் ஆண்டு நவம்பர் 22 ம் தேதி அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்தி அனுப்பிய பைன், தனது நிர்வாண படத்தையும் அனுப்பியிருந்தது பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து, பைனிடம் கண்டிப்பு காட்டிய அந்த பெண் 2018 ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய மனித உரிமை வாரியம் ஆகியவற்றுக்கு புகார் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தற்போது பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு களங்கம் விளைவிக்க தான் விரும்பவில்லை என்று டிம் பைன் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டிம் பைனின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கூறியிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ரிச்சர்ட் ப்ருடன்ஸ்டீன் அடுத்த கேப்டன் யார் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக உள்ள பேட் கம்மின்ஸுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.