சென்னை

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட மாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  எனவே தற்போது பலரும் வீட்டிலிருந்தே கணினி மூலம் பணி  புரிந்து வருகின்றனர்.  மேலும் தற்போது மாணவர்களுக்கான வகுப்புக்களும் ஆன்லைன் மூலமே நடைபெறுகிறது.   இந்நிலையில் மின் வாரியம் பராமரிப்பு பணிகளின் போது 2 மணி நேரம் மின் தடை ஏற்படும் என அறிவித்தது.

மின் தடையை முழுவதுமாக ரத்து செய்யுமாறு மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதையொட்டி தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.  இது மக்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அறிவிப்பில், “முழு ஊரடங்கு காரணமாக அலுவலகங்களில் பணி புரிவோர் வீட்டில் இருந்தே பணி  புரிந்து வருகின்றனர்.  மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.    எனவே தற்போது தடையின்றி மின்சாரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே தமிழக மின் வாரியத்தால் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்படுவது ஊரடங்கு முடியும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தவிர்க்க முடியாத மற்றும் மிகவும் அவசியமான மின்சார பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் நடைபெறும். ஆகவே வரும் 7 ஆம் தேதி வரையில் மின் தடை இருக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.