சென்னை

மிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.   மேலும் ஒமிரான் தொற்றும் அதிகரித்துள்ளது.  இதையொட்டி இன்று தமிழக அரசு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.   தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தின் முடிவுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.,  மேலும் ஒமிக்ரான் மற்றும் கொரோன அதிகரிப்பு காரணமாகப் பல கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  அதன்படி மழலையர் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

தவிர அனைத்து பள்ளிகளிலும் 1 முதல்  8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த ஜனவரி 10 ஆம் தேதி வரை அனுமதி இல்லை.  மேலும் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சி மற்றும்  பொருட்காட்சிகள் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன.   மேலும் சமுதாய, கலாச்சார அரசியல் கூட்டம் உள்ளிட்ட மக்கள் கூடும் கூட்டங்களுக்குத் தடை தொடர்கிறது.

மாநிலம் எங்கும் உள்ள திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.  இதைப் போல் அழகு நிலையங்கள், முடி திருத்தகம் ஆகியவையும் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு, கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றிச் செயல்படும்.   தவிர வழிபாட்டுத் தலங்களிலும் தற்போதைய நடைமுறையே தொடரும்.   மேலும் உணவகங்களில் 50%  மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தவிரத் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் வரையிலும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  உடற்பயிற்சி மற்றும் யோகா நிலையங்களில் 50% பேருடன் மட்டுமே செயல்பட வேண்டும்” என அறிவித்துள்ளார்.