இந்தியாவில் 77 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள், 2019 இறுதியில் 82 கோடி பேர் செல்போன் பயன்படுத்துவார்கள் என்றும் 2021 30% முதல் 50% வரை கூடும் என்று எதிர்பார்க் கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்து டிக்டாக் செயலியை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை சட்டசபையில் இருந்து வந்துள்ளது. ஆனால் உண்மையாகவே டிக்டாக் தடை செய்யப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு முன் டிக்டாப் செயலி பற்றி தெரிந்துகொள்வோமா?
டிக்டாக் செயலிஆரம்பிக்கப்பட்டபோது அந்த செயலின் பெயர் டுயின், சீன மொழியில் vibrating sound தமிழில் ஒலி அதிர்வி என்று பொருள்
உண்மையாகவே டுயின் ஆரம்பித்த ஒரு வருடத்தில் அதிரடியான அட்டகாசமான வளர்ச்சி, எப்படிப்பட்ட வளர்ச்சி என்றால் ஒரே வருடத்தில் 100 மில்லியன் பயனாளர்கள், அதாவது 10 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 100 கோடி பேர் இந்த செயலியில் உள்ள காணொளிகளை கண்டுகளித்திருக்கின்றனர். அதன் பின் 2017ல் தான் டுயின் என்ற பெயரை உலக சந்தைக்கு ஏற்றார்போல் டிக்டாக் என்று மாற்றியிருக் கிறார்கள், பின் மியூசிகலியும், டிக்டாக் உடன் இணைந்துவிட, அப்புறம் என்ன இன்று 75 மொழி களில் 50 கோடி பயனாளர்களுடன் இந்த செயலி தன்னிடம் உலகையே கட்டிப்போட்டிருக்கிறது.
சரி இதன் சிறப்பம்சம் என்னவெனில் நீங்கள் பயன்படுத்தும் கீச் கீச் செயலி, அதாங்க நம்ம டுவிட்டர் செயலி ஆரம்பிக்கப்பட்டபோது நாம் சொல்ல வந்த விசயத்தை 140 எழுத்துக்குள் அடக்கிவிடவேண்டும். டுவிட்டர் வந்த காலம் இணையம் ஆமை வேகத்தில் வந்தகாலம், ஆனால் அதன்பின்னர் இந்தியாவில் ஜியோ வந்தபின்னர் ஜியோ பயனாளர்கள் யாரும் உரையாக பார்த்ததாக கேள்வியே இல்லை,. செய்திகளை நேரடியாக யூடியூப்பிலும், நேரடி காணொளி யாகவே கண்டுகளித்தனர், இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த செயலி அறிமுகமானது, அதாவது ஏதாவது பாட்டுக்கு தாமே பாடுவது , தாமே நடனமாடுவது ,சினிமா வசங்களை பேசுவது போன்ற பல்லூடக செயலியாகவும், சிறந்த பொழுதுபோக்கு செயலியாக விளங்கியது.
இதில் சிறப்பாக பாடியவர்கள் தங்களை மேலும் மெருகேற்றிக்கொண்டார்கள், புதியதாக பாட ஆரம்பித்தவர்கள் குறைந்தபட்சம் ராகங்களையாவது தெரிந்துகொண்டார்கள்.
ஆனால் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் போர் அடிக்கும்தானே, அப்போத்தான் அரசியல்வாதிகளை கலாய்ப்பது போன்ற செய்கைகளையும், மற்றவர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்ட புதியமுறைகளை செய்வது என்று நம் பயனாளர்கள் அவர்களின் அடுத்த எல்லையை தொட்டுவிட்டனர். நிச்சயம் இது ஆரோக்கியமானது அல்ல என்று தெரிந்தாலும் அந்த செயலியை தமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென் பது பயனாளருக்கு தெரியவல்லை
‘டிக்டாக்கிலயே அதிலயே முழுநேரமும் பார்த்து பொழுதைக் கழிக்கின்றனர். ‘டிக் டாக்’, வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் பதிபவர்களை பார்த்து தாமும் அப்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் வருகிறது, இந்தச் செயலியில் நேரத்தைக் கழிப்பவர்கள் அவர்களது கவனச்சிதறல் காரணமாக படிப்பு, வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் அவதியுறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான் மஜக உறுப்பினர் தமீமுன் அன்சாரி ‘டிக் டாக்’ செயலி கலாச்சாரத் திற்குச் சீரழிவு ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும். . இதைத் தடை செய்யவேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் தடை செய்யக் கோரி வருகின்றனர். இந்நிலையில் கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய ‘டிக் டாக்’ செயலியைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?” என தமீமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன், ” ‘டிக் டாக்’ செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து அவர்களை தொடர்புக் கொண்டு தடை விதிக்க முயற்சி எடுக்கப்படும். ப்ளூவேல் என்கிற விளையாட்டு பலரையும் பாதித்தபோது அதுகுறித்துப் பேசி அந்த சர்வர் அமெரிக்காவில் இருப்பதை அறிந்து தடை செய்ய வைத்தோம். அதேபோன்று ‘டிக் டாக்’ செயலியின் தலைமையிடத்தில் தொடர்புகொண்டு மத்திய அரசின் உதவியுடன் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
இதை பல அரசியல் தலைவர்கள் வரவேற்றாலும் , டிக்டாக் செயலியை தடை விதிப்பது பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் கொண்டுவரும்.
ஏனெனில் உலகிலயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, அதிகமான மக்கள் தொகைதான் அந்நிய நிறுவனங்களின் சந்தை. இந்த சந்தையை குறிவைத்து இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் செல்பேசி செயலிகளில் முதலீடு செய்துவரும் சூழ்நிலையில் இதுபோன்ற தடை விவகாரங்கள் புதிதாக வரும் பல்வேறு செல்பேசி செயலிகளின் முதலீட்டுக்கு பிரச்னையை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் இருந்தும் உலக தரத்திற்கு பல்வேறு செல்பேசி செயலிகள் எதிர்காலத்தில் வரும். உலக அளவில் நம் செயலிகளை கொண்டு செல்ல அவர்களுக்கு பெரும் முதலீடு தேவைப்படும். இதுபோன்ற தடைகள் நம் அந்நிய முதலீட்டாளர்களை நம் முதலீடுகளில் இருந்து அந்நியப்படுத்திவிடும்.
அதற்கு பதிலாக இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ ஏற்கனவே வைத்திருக்கும் பிரைவசி பாலிசி(Privacy policy,, நிபந்தனை விதிகளில் (Terms & Conditions) ல் செயலிகளுக்கான பயன்பாட்டு்க் கட்டுப்பாடு ( Usage Policy) விதிக்கலாம். பயன்பாட்டு கட்டுப்பாடு என்ற புதிய விதியில் அந்தந்த மாநிலங்களில் பாரம்பரியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை செய்யும் பயனாளர்களை முதலில் மட்டுறுத்தி அதன்பின்னர் மீண்டும் அந்த பயனாளர் தவறிழைத்தால் அப்போது அவரை நிரந்தரமாக தடை செய்ய செய்வதுவது சிறந்த முறையாக இருக்குமே தவிர செயலியையே தடை செய்வது சிறந்த முறை ஆகாது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்து இதுபோன்ற கோரிக்கைகள் வரும்போது அந்நிய முதலீட்டாளர்கள் நிச்சயம் தமிழகம் சார்ந்த செயலிகளில் முதலீடு செய்ய யோசிப்பார்கள். ஆனால் இப்போது இருக்கின்ற, வரப்போகும் செயலிகளுக்கு என்று தனியான சட்டதிட்டங்களை உருவாக்கி அந்த சட்டத்தினை அமல்படுத்தினால் போதுமானது.