சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்பாடு குழு அமைக்க கட்டிடம் அமைப்போர் சங்கம் வேண்டுகோள்

சென்னை

சிமிண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு குழு அமைக்க கட்டிடம் அமைப்போர் சங்கம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிமின்ட் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பல கட்டிடங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புக்கள் அரைகுறையாக நிற்கின்றன. கட்டுமான தொழிலுக்கு சிமிண்ட் இன்றியமையாத ஒன்று என்பதால் அதன் விலை உயர்வு கட்டுமான தொழிலை பாதித்து அதனால் பலர் வேலை இழந்துள்ளனர்.

இது குறித்து இந்திய கட்டிடம் கட்டுவோர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன், “கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்த சிமிண்ட் விலை கடந்த 10 நாட்களில் திடீரென 37% அதிகரித்துள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்வு இல்லாத நேரத்தில் இவ்வாறு விலை உயர்ந்தது ஆதாரமற்றதாகும். அது மட்டுமின்றி எரிபொருள் விலையும் சில நாட்களாக இறங்கு முகத்தில் உள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் சிமிண்ட் விலை உயர்வு மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது ரியல் எஸ்டேட், தொலைதொடர்பு துறை போன்றவைகளுக்கு கட்டுப்படுத்த குழுக்கள் உள்ளன. அதைப் போல சிமிண்ட் விலைக்கும் ஒரு கட்டுப்பாட்டு குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அளிக்க ஆரம்பிக்கப்பட்ட அம்மா சிமிண்ட் விநியோகம் தற்போது மிகவும் முடங்கி உள்ளது. இதை மீண்டும் புதிப்பிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த முறை இது போல் சிமிண்ட் விலை உயர்ந்த போது அண்டை மாநிலங்களில் இருந்து சிமிண்ட் வரவழைக்கபட்டது. தற்போதுள்ள நிலையில் அந்த வழியும் அடைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Builders association, Cement price hike, regulating body, request to centre, கட்டிடம் அமைப்போர் சங்கம், கட்டுப்பாட்டு குழு, சிமிண்ட் விலை உயர்வு, மத்திய அரசுக்கு கோரிக்கை
-=-