சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் உலகெங்கும் நேற்று ரிலீஸ் ஆனது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த படமாக டைகர் 3 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட ரிலீஸை சல்மான் கான் ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் தோன்றி டைகர் 3 படத்தை ஒரு மல்டி ஸ்டார் படமாக மாற்றியுள்ளார்.

இதனால் ஷாருக்கான் ரசிகர்களும் இந்தப் படத்தின் ரிலீஸை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் டைகர்-3 திரையிடப்பட்டது.

இந்த தியேட்டரில் படம் பார்க்க வந்த ஷாருக்கான் ரசிகர்கள் படத்தில் ஷாருக்கான் அறிமுகக்காட்சியின் போது தியேட்டருக்குள்ளேயே பட்டாசு மற்றும் வானவேடிக்கைகளை நிகழ்த்தி தியேட்டரில் படம்பார்க்க வந்த அனைவரையும் அல்லோலகல்லோலப் படுத்தினர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.