நொய்டா:

நொய்டா சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உ.பி. தேர்தலுக்காக பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நொய்டா தொகுதியில் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நொய்டா பாஜவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்காக உழைத்த பலர் இருக்கையில் வெளியில் இருந்து கொண்டு வந்து வேட்பாளரை நிறுத்துவது சரியல்ல என்று பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நீண்ட நாட்களாக கட்சியில் இருப்பவர்கள் வெளியேறுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

நொய்டா பாஜ பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவின் பிரதிநிதியுமான சஞ்சய் பாலி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் பாலி தனது கட்சியின் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்த சுயேட்சையாகவோ அல்லது வேறு கட்சியில் சேர்ந்தோ போட்டியிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேட்பாளராக பங்கஜ் சிங் அறிவிக்கப்பட்டதன் மூலம் உள்ளூர் பாஜவினரின் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சராக இருக்கிறார். அவரது மகன் தற்போது நொய்டா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மற்ற கட்சிகளை போல் வாரிசு அரசியல் நடக்கிறது என்று பாலி தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்து வருகிறேன். இந்த முடிவு என்னை வேதனைப்படுத்தியுள்ளது. இதனால் எனது பொதுச் செயலாளர் பதவியையும், மத்திய அமைச்சரின் பிரதிநிதி பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு பங்கஜ் சிங்கை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவேன். பாஜவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த தற்போதைய நொய்டா எம்எல்ஏ விம்லா பதமும் ஏமாற்றம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜ உ.பி மாநில பொறுப்பாளர் ஓம் மாது கூறுகையில், தகுதி அடிப்படையில் பாஜக குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி போல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.