சென்னை:

மிழகத்தில் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இன்று அதிகாலை முதலே சென்னை, காஞ்சிபுரம் உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளுர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் நேற்ற இரவும் மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, போளூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. பெண்ணாடம், திட்டக்குடி, இறையூர், முருகன்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது

கும்பகோணத்தில் நேற்று மாலை லேசாக தொடங்கிய மழை இரவு வரை  நீடித்தது. சம்பா சாகுபடிக்காக நிலத்தை பண்படுத்தி வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுபோல, பெரம்பலூர் பகுதியிலும் மழை பெய்தது.

மேலும்,  திருச்சி,விழுப்புரம், தர்மபுரி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

இதனிடையே, வெப்பச் சலனம் காரணமாக 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் பருவமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். மேலும் தென் தமிழக பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.