ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில்,  லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை  பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து வேட்டையாடி வருகின்றனர். . இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

சோபியான் மாவட்டம் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வந்தனர்  இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.