சேலம்:

சேலம் மாவட்டம் நாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயத 40). இவரது மகள் இலக்கியா (வயது 3). இலக்கியா உடல் நிலை சரியில்லாமல் நேற்று இறந்தார். அவர் இறப்புக்கான காரணம் கூட இன்னும் உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.

இது குறித்து வெங்கடேசன் கூறுகையில், ‘‘தொடக்கத்தில் இது டெங்கு என்று கூறினார்கள். பின்னர் என்ன பிரச்னை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் தவறிவிட்டனர். தற்போது வரை எங்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை’’ என்றார்.

இலக்கியா இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு மோகன் குமாராமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து டீன் கனகராஜ் கூறுகையில், ‘‘வைரல் காய்ச்சல் க £ரணமாக இலக்கியா இறந்துள்ளார்.

நாங்கள் டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்று கருதினோம். ஆனால், மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரல் காய்ச்சல் தான் என்பது தெரியவந்தது. இதை டெங்கு என்று நான் கூறமாட்டேன். அது நிரூபனம் ஆகவில்லை. அதனால் இதை வைரல் காய்ச்சல் என்ற பட்டியலில் தான் வைத்துள்ளோம்’’ என்றார்.

நேற்று (12ம் தேதி) மட்டும் இந்த மருத்துவமனையில் 3 வயது முதல் 10 வயது வரையிலான 3 பெண் குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் 2 பேர் வைரல் காய்ச்சலால் இறந்துள்ளனர். ஒரு குழந்தை மட்டும் வைரல் ஈரல் அழற்சி காரணமாக இறந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

டெங்கு காய்ச்சலில் சிக்கி தமிழக மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், சுகாதார துறை இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 393 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75 பேர் இறந்துள்ளனர். ஆனால், இதில் 25 பேர் மட்டுமே டெங்குவுடன் தொடர்பு உடையவர்கள். மற்றவர்கள் உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி கூறுகையில், ‘‘பரிசோதனைகள் முழு விபரங்களை தெரிவிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் பல வகையான வைரஸ்கள் காய்ச்சலை உண்டாக்குகின்றன. எனினும், டெங்குவை தவிர இதர சாதாரண காய்ச்சல் காரணமாக இளம் வயதில் இறப்பு ஏற்படுவது சாத்தியமில்லை.

இதர வைரஸ் தாக்குதலை எளிதில் குணப்படுத்திவிடலாம். டெங்கு காய்ச்சல் இருந்து அதை மருத்துவமனைகள் கண்டுபிடிக்காமல் இருந்ததன் காரணமாக இறப்பு ஏற்பட்டிருக்கலாம். எனினும் சூழ்நிலைய சமாளிக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் அனைவரும் இந்த பணியில் தான் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூறுகையில், ‘‘ தற்போது தினமும் இங்கு மழை பெய்து வருகிறது. பிளாஸ்டிக், வீடுகளின் கழிவு மற்றும் தெர்மோகூல் போன்றவற்றில் மழை நீர் தேங்கி நிற்கிது. இதனால் தான் காய்ச்சல் பரவி வருகிறது. எனினும், பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது. இதனால் டெங்கு பாதிப்பு அதிகமாகியுள்ளது’’ என்றார்.