சென்னை,

தீபாவளி போனஸ் கேட்டு 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஆம்புலன்ஸ் வருவதால் போராட்டம் நடத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்தியஅரசின்  நிதி உதவியோடு நாடு முழுவதும்  செயல்பட்டு வருவது 108 ஆம்புலன்ஸ் சேவை.  தமிழகத்தில் இந்த சேவை ஊர்தியின் டிரைவர்களாக 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

தமிழக அரசு அனைத்து ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. ஆனால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதன் காரணமாக அரசிடம் போனஸ் கேட்டு,வரும் 17ம் தேதி வேலை நிறுத்தப் போராட்ட்த்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர்17ம் தேதி இரவு 8 மணி முதல், தீபாவளி நாளான அக்டோபர் 18 அன்று இரவு 8 மணி வரை மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என்று அறிவித்தனர். தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர்.

இதை எதிர்த்து, வழக்கறிஞர் பேட்ரிக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.சுந்தரம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பேட்ரிக், தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்துகள் ஏற்படும். அப்போது அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானது. இந்த நிலையில், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உயிர்பலி ஏற்படும். எனவே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி ஆம்புலன்ஸ் நிறுவனத்துடனும், ஊழியர்கள் சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடந்த ஆண்டு உத்தரவுப்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என தடை விதிக்கிறோம் என்றனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, ”ஆம்புலன்ஸ் நிறுவனம் தனியார் நிறுவன பங்களிப்பில் நடக்கிறது. கடந்த ஆண்டே நீதிமன்றம் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்துள்ளது அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும், பேச்சு வார்த்தையில் உடன்பாடு வராமல் அவர்கள் போராட்டம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.

ஏற்கனவே கடந்த ஆண்டும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் அறிவித்தனர். அப்போதும் உயர்நீதி மன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது