தர்மபுரி,

ர்மபுரி மாவட்டத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட கால்வாயின் சுவர் இடிந்து விழுந்தது. அதன் காரணமாக கால்வாயில் ஓடிய தண்ணீர் வீணாக வெளியேறியது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  செங்கன்பசுவந்தலாவ் ஏரியில் புதிதாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு  கால்வாய் கட்டப்பட்டது. இந்த காவல்வாய் வெறும் சிமென்ட் கலவையால் கட்டப்பட்டிருந்ததால் தண்ணீரில் கரைந்து உடைந்தது.

தற்போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சின்னாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி செங்கன்பசுவந்தலாவ் ஏரியும் நிரம்பியது.

இதன் காரணமாக புதிய கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.  சோதனை ஓட்டம் செய்யும் அடிப்படையில் வினாடிக்கு 30 கன அடி விதம் தண்ணீர் இன்று திறந்து விடப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக புதியதாக கட்டப்பட்ட கால்வாய்  சில நிமிடங்களிலேயே உடைந்தது. சுமார் 100அடி நீளம் அளவுக்கு கால்வாய் உடைந்து நொறுங்கி தண்ணீரில் கரைந்தது.

இதைக்கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கால்வாயில் எந்தவித கம்பியோ, காங்ரீட்டோ போடாமல், வெறும் மணல், சிமென்ட் கலவையால் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதன் காரணமாகவே தண்ணீரின் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் கால்வாய் உடைந்து போயுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது, தண்ணீர் செல்லும் கால்வாய் வெறும் சிமெண்ட் கலவையால் மட்டுமே கட்டியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த கால்வாய் முழுவதும் அகற்றப்பட்டு,  புதிய கால்வாய் காங்கிரிட் சிமெண்டால் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.