சென்னை:
மாவட்ட ஆட்சித்தலைவரை பகிரங்கமாக மிரட்டியஅரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின்  முன்ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

கடந்த மாதம் கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்த அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  மாவட்ட ஆட்சியர் கொரோனா தொடர்பான கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை, படித்த முட்டாள், என் பின்னர் 2 லட்சம் பேர் உள்ளனர்; அவர் இனி வெளியே நடக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில்  பேசினார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. செந்தில் பாலாஜியின் மிரட்டல் சமூக வலைதளங்களிலும் வைரலானது.  இது தொடர்பாக  தான்தோன்றிமலை  காவல்நிலையில்,  கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகார் அளித்தார்.
இதையடுத்து, திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். வழக்கும், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனால் தலைமறைவான செந்தில்பாலாஜி, முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில்,  தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.