அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

டிரம்ப் வெளியிட்ட நிர்வாக உத்தரவை அடுத்து சட்டவிரோத குடியேறிகள் பலரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள குருத்வாராக்களில் அமெரிக்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அமெரிக்க அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள சீக்கிய அமெரிக்க சட்டப் பாதுகாப்பு மற்றும் கல்வி நிதியம் (SALDF), இந்த நடவடிக்கை சீக்கிய நம்பிக்கையின் “புனிதத்தன்மையை” அச்சுறுத்துவதாகவும், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு “அதிர்ச்சியை” ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியது.

“உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் பதட்டமான பகுதிகளுக்கான பாதுகாப்புகளை அகற்றிவிட்டு, குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை குறிவைக்கும் முடிவால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்” என்று SALDEF நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத குடியேறிகள் மீதான டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 சட்டவிரோத குடியேறிகள் கைவிலங்குடன் பிரேசிலின் வடக்கு நகரமான மனாஸ்க்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு தரையிறக்கப்பட்டனர்.

அதேபோல் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அந்த விமானங்கள் தரையிறங்க கொலம்பியா அனுமதி மறுத்தது.

இதனையடுத்து கொலம்பியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்ததை அடுத்து கொலம்பிய குடிமக்களை பயணிகள் விமானங்கள் மூலம் கௌரவமாக அழைத்துச் செல்வதாக கொலம்பிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குருதவாராக்கள் மீது அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது தொடர்பாக சீக்கிய அமைப்புகள் கொந்தளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.