மயிலாடுதுறை: பழம்பெரும் தருமபுரம் ஆதீனத்திற்கு, ஆபாச வீடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மிரட்டலுக்கு உடந்தையாக பாஜக, திமுகவினர் மற்றும் வழக்கறிஞர் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான புகாரின் பேரில், பாஜக ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதாவது, தருமபுரம் ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்ட பாஜக ஆதரவாளர் ரவுடி விக்னேஷ் & பாஜக பிரமுகர் வினேத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செய லாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக கைகோர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலில் மயிலாடுதுறையில் சீட் வாங்க முயற்சித்து வரும் அகோகரம் தேர்தல் செலவிற்காக ரூ.20 கோடி பணத்தை லம்ப்-ஆக மிரட்டி பறிக்க முயற்சித்த போது மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டுக்கொள்ளைக்கு உடந்தையாக இருந்த ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், தற்போது காசியில் ஆதீனத்துடன் தான் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.
இந்த நிலையில், அவருக்கு மர்ம நபர்கள், அவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதினத்தில் இருந்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மடாதிபதியின் சகோதரரும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி அளித்த புகாரில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும் இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு விடுவோம் என்றும், அப்படி வெளியிடப்படாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்றும் தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு பின்னணியில், செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் உள்பட 7 பேர் மீது புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மை என்பது கண்டறியப்பட்டருது. இதைத்தொடர்ந்து, இந்த புகாரின் அடிப்படையில், நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அதாவது, ஆடுதுறை வினோத், திருவெண்காடு ரவுடி விக்னேஷ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று (பிப். 28) ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் பா.ம.க.வில் இருந்து பிரிந்துவந்தவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சித்ததாக வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரம் ஆதீனம் பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.