சென்னை:  மார்ச் 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும், முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் 71 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, அரசின் சாதனைகள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்களை, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நடத்த, மாவட்ட செயலர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, பொதுக்கூட்டங்கள் நடத்த, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு நகரிலும் சிறப்புரையாற்றுவோர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக, திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  மார்ச் 1-ம் தேதியன்று திமுக தலைவர் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.  50 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர், திமுகவை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.

பெரியாரின் சமூகநீதியையும், அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார். அத்தகைய தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திமுக அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்திடுவது” என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் மாநகரம் மற்றும் நகரங்களில் அறிவிக்கப் பட்டுள்ள பேச்சாளர்களைக் கொண்டு, “எல்லோருக்கும் எல்லாம்”, “திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!” நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.