ஸ்ரீநகர்: வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவால், அம்மாநிலத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநில பணியாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது. அதற்கு முன்னதாகவே, அம்மாநிலத்தில் இருக்கும் இதர மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டது மத்திய அரசு.

இதனையடுத்து, அம்மாநிலத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஜம்முவுக்கு வந்துசேர, வாகனங்கள் கிடைக்காமல் பெரும் அவதியுற்று வருகின்றனர். அவர்கள், சுற்றுலா வரவேற்பு மையத்தில் குவிந்து வருகின்றனர். சிலர் தனியார் வாகனங்களை வாடகைக்குப் பிடித்து ஜம்முவுக்கு வந்து ரயிலுக்காக காத்திருக்கின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் ஜார்க்கண்ட், பீகார், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கட்டட வேலை, கைவினைஞர் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரிலிருந்து ஜம்முவுக்கு வாகனம் ஓட்டும் சில ஓட்டுநர்கள் கூறியதாவது, “நாங்கள் எத்தனை பயணிகளை இதுவரை கொண்டுவந்து சேர்த்தோம் என்று சரியாக தெரியவில்லை. ஆனால், அந்த எண்ணிக்கை பல்லாயிரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிலர் தங்களின் உடைமைகளை தூக்கிக்கொண்டு கால்நடையாகவே நடக்கும் காட்சிகளும் உண்டு” என்றனர்.