மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 1 ம் தேதி துவங்கி மே 9 ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

அழகர் மலையில் இருந்து மே மாதம் 3 ம் தேதி புறப்படும் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மே 5 ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருவார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடங்களை ஆய்வு செய்த அமைச்சர், பாஸ் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே ஆற்றில் இறங்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

காவல்துறை கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் கோயில் நிர்வாகத்தினர் இதில் தலையிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாஸ் இல்லாமல் வருபவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறு எந்தவொரு முக்கிய நபராக இருந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முக்கிய நபர்களின் பெயரைக் கூறிக்கொண்டு 10 – 20 பேர் மொத்தமாக செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரில் சமீபத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் இடுப்பளவு தண்ணீரில் குளத்தில் மூழ்கி பலியான சம்பவத்தை அடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.