தூத்துக்குடி: மூடப்பபட்டு கிடக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  ஆக்சிஜன் தயாரிப்புக்காக மீண்டும் திறக்கலாம் என தமிழக அரசு தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழகஅரசின் முடிவுக்கு தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர்.  ஆக்சிஜனுக்காக  திறக்க அனுமதி வழங்கினால், படிப்படியாக ஒவ்வொரு யூனிட் திறப்பதற்கும் அனுமதி பெற்று விடுவார்கள்,அதைத்தொடர்ந்து ஆலை முழுமையாக இயங்க வழி வகை செய்து விடும், ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவினர், சமூக அமைப்புகள் எச்சரிக்கை செய்துள்ளன.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு

ஆலையை திறக்க எதிர்ப்பு  தெரிவித்த்து, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு கொடுத்துள்ளது. அதில்,  தூத்துக்குடி மாவட்டத்தின் மூச்சுகாற்றை நச்சுக்காற்றாக்கிய உயிர்ச்சூழலை அழித்த, மனித உயிர்கள் இழப்புக்கு காரணமான நாசாகர ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து நிரந்தரமாக மூடியுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றமும் நீர், நிலம், காற்று என ஒட்டு மொத்த உயிர்ச் சூழலையும் நஞ்சாக்கிய நச்சு ஆலை ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை எனவும், சுற்றுச்சூழல் சட்டவிதிமுறைகளை மீறிய ஆலை இது.

எனவே இந்த ஆலையை நிரந்தரமாக மூடியது சரியெனவும் 850 பக்க தீர்ப்பை அளித்துள்ள நிலையில், நயவஞ்சக சூழ்ச்சியோடு ஆக்ஸிஜன் தயாரிப்பு என்ற பெயரில் புறவாசல் வழியாக ஸ்டெர்லைட் நச்சு ஆலை முகம் நுழைக்க முயலுகிறது. நஞ்சில் அமிர்தம் சுரக்குமா, ஒநாய் ஆட்டை காக்குமா, அதுபோல தான் வேதாந்தாவின் திடீர் சமூக நல வேஷமும்.

உண்மையிலேயே ஆக்சிஜன் தயாரித்து நாட்டு மக்களுக்கு துணை நிற்க வேண்டுமானால். கீழ் காணும் வேதாந்த குழும ஆலைகளின் கீழ் உதவி புரிவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ..

சத்தீஷ்கர் கோர்பாவில் உள்ள வேதாந்த அலுமினிய நிறுவனம், ஒடிசா மாநில படகுடாவில் உள்ள லாஞ்சிகரே அலுமினா சுத்திகரிப்பு நிலையம், ராஜஸ்தான் உதல்பூர், இந்துஸ்தான் துத்தநாகம் தொழிற்சாலை, ஹரியானா குர்கானில்உள்ள கெய்ர்ன் இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், ஜர்கண்ட் போகாரோ, ஈ.எஸ்.எல் ஸ்டீல்கள், கர்நாடகா, கோவாவில் உள்ள Metal Production தயாரிப்பு ஆலைகளில் கட்டாயமாக ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளும் உண்டு. இன்னும் பல வேதாந்தா குழும ஆலைகளும் உண்டு. அதன் மூலம் ஆக்ஸிஜன் தயாரித்து வழங்கலாமே, 

அது போக இந்த கம்பெனிகள் வட மாநிலங்களில் அமைந்துள்ளதால் பயண தூரமும் மிகக் குறைவு. வட மாநிலங்களில் தான் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் அதிகம். எனவே அங்குள்ள வேதாந்தா கம்பெனிகளில் உற்பத்தி செய்து வினியோகம் செய்வது எளிது. அங்கே உற்பத்தி செய்வது சாலச் சிறந்தது.  இதுவே தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கை. மக்களின் கோரிக்கையினை மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் தெரியப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க கூடாது என வலியுறுத்தி நாடார் முன்னேற்ற பேரவை சார்பில் நிர்வாகிகள் மனு அளித்தனர். 

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான்

அவர்,  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன. தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி, சுவாசிக்கும் காற்றையே நச்சுக்காற்றாக மாற்றியதோடு மட்டுமல்லாது 14 உயிர்களின் மூச்சுக்காற்றையும் நிறுத்தக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் உயிர்காக்க சுவாசக்காற்றை உற்பத்தி செய்து தருவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது.

மத்திய அரசின் கையாலாகத்தனத்தாலும், மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையினாலும் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் காரணமாகக் கொண்டு மீண்டும் இயங்குவதற்கு அடித்தளமிடும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிகளை மொத்தமாய் முறியடிக்க வேண்டும். மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் முற்று முழுதாகத் தீங்கு விளைவிக்கிற, நச்சு ஆலை என்று உயர் நீதிமன்றத்தாலேயே குறிப்பிடப்பட்ட, சூழலியல் கேடுகளுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எதன்பொருட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.

தாமிரத்தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், அத்தட்டுப்பாடு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் கூறி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று வாதிட்டவர்கள், இக்கட்டான தற்காலச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்க வேண்டும் எனக் கூறி வருவது முழுக்க முழுக்க ஏமாற்றுவாதமாகும்.
ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆட்பட்ட தூத்துக்குடி மக்கள் நாளும் அல்லல்பட்டு நின்றபோது அதனைத் துளியும் மதித்திடாது இலாபநோக்கில் சுற்றுச்சூழலைச் சீரழித்து, மக்களைத் துன்புறுத்தி கொள்ளை இலாபம் ஈட்டி வந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், இன்றைக்கு மக்கள் உயிரின் மீது பரிவு காட்டுவதாகக் கூறுவது பச்சை சந்தர்ப்பவாதம் என்பதைத்தாண்டி வேறில்லை.

சட்டத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் வழியாக ஊடுருவப் பார்க்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டிய தமிழக அரசு, நீதிமன்றத்தில் எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, தற்போது கருத்துக்கேட்புக் கூட்டம், அனைத்துக் கட்சிக்கூட்டம் என வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகக் காய் நகர்த்துவது தேவையற்ற சிக்கலையும், பதற்றத்தையும் தமிழகத்தில் உருவாக்கும். 14 உயிர்களைப் பலிகொண்ட அந்த ஆலையை எதன்பொருட்டும் திறப்பதெனும் பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் மண்ணின் மக்களின் மனநிலையாக உள்ளது.

தனக்கிருக்கும் அதிகார நெருக்கத்தையும், பணபலத்தையும் கொண்டு யாரையும் வளைத்துப் போட்டுவிடலாம் எனும் மமதையில் ஆலையை மீண்டும் திறந்துவிடக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வரிந்துகட்டி நிற்பதும், அதற்கு ஆதரவாக மாநில அரசு முன்முயற்சிகளை முடுக்கி விடுவதும் வெட்கக்கேடானது. தங்கை ஸ்னோலின் உள்ளிட்ட 14 பேரைக் கண்முன்னே துள்ளத்துடிக்கப் படுகொலை செய்திட்ட அரசுகள் இன்றைக்குத் துளியும் மனச்சான்று இல்லாது ஸ்டெர்லைட் ஆலையின் பக்கம் நிற்கத் துணிவது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆகவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது அரசின் கொள்கை முடிவென அறிவித்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கிற வேதாந்தா குழுமத்தின் முன்நகர்வுகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதற்கு மாறாக, தற்காலச் சூழலைக் காரணமாகக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்; தேவையற்றப் பதற்றமும், சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்படுமென எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்

ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமம் நாடு முழுவதும் எண்ணற்ற தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. வேதாந்தா குழுமம் மெடிக்கல் ஆக்சிஜன் தயாரிக்கிறார்களா? தயாரித்து அரசுக்கு வழங்குகிறார்களா? வேதாந்தா குழும தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு ஆக்ஸிஜன் தயாரித்து தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என தமிழக அரசு கேள்வி எழுப்ப வேண்டும்.

ஆக்சிஜன் ஆலை என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க நடக்கும் சதியை முறியடிக்க வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற காரணத்தை சொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மறைமுகமாக திறக்க மத்திய அரசு துணை போய் வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் ஆலையை இயக்குவதற்கு அரசுக்கு நிபுணத்துவம் கிடையாது. அப்படியே இயக்கினாலும் தரமற்ற ஆக்சிஜன்தான் கிடைக்கும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை வேதாந்தா குழுமம் நேற்று தாக்கல் செய்துள்ளது.

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாகுறையை காரணம் காட்டி, ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவது போல செய்து கொடுத்து மறைமுகமாக ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணியை செய்து ஆலையை மீண்டும் தொடங்க துடிக்கும் மறைமுக சதித்திட்டமாகும்.

உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவன வளாகத்திற்குள் ஆக்சிஜன் ஆலை அமைத்து உற்பத்தி செய்யலாம் என உத்தரவிட்டாலும் அதை நிராகரிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் ஆக்சிஜன் ஆலையை இயக்க வேண்டும் என உத்தரவிட்டால் மக்கள் போராட்டத்தின் மூலம் முறியடிப்போம் என எச்சரித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 5 மாவட்ட போலீசார் தூத்துக்குடி முழுவதும் குவிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 5 அடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. தூத்துக்குடி நகரம் பரபரவென காணப்படுகிறது.