சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம், விசாரணை அறிக்கையை  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பல்வேறு நோய்கள் பரவ காரணமாக அமைந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு  எதிராக க 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ந்தேதி,  நடந்த மக்கள் போராட்டத்தின்போது  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதுகுறித்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதசீன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் தேசிய மனித உரிமை ஆணையம் உள்பட பல்வேறு தரப்பினரும் விசாரணை நடத்தி வந்தனர்.

தேசிய மனித உரிமை ஆணையம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தியது.  பலியானவர்கள் குடும்பத்தின ருக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணை அலுவலகத்திற்கு வரவழைத்து விபரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணை அலுவலகத்திற்கு வராதவர்களிடம் நேரடியாக வீட்டிற்கு சென்று விபரங்கள் கேட்டனர்.  அப்போது துப்பாக்கி சூடு நடந்த 22, 23-ந்தேதிகளில் பணியில் இருந்த டி.எஸ்.பி. களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 9 டி.எஸ்.பி.க்கள் தங்களது வாக்குமூலங்களை எழுத்து பூர்வமாக அளித்தனர். மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்கள். அதையடுத்து விசாரணை முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விசாரணை அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் என்பவர் , தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து மீண்டும் விசாரிக்கக்கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தமிழகஅரசு தாக்கல் செய்த மனவில், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 84 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரனையின்போது,  தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், விசாரணை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.