தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மாணாக்கர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மற்ற மாணவ மாணவிகளுக்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று இரவு தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 616, செங்கல்பட்டில் 266, திருவள்ளூரில் 71 மற்றும் காஞ்சிபுரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், 19 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், 82 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மருத்துவ மாணவ, மாணவிகள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணாக்கர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று உறுதியான மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.