சென்னை,

பொறியியல் கல்விக்கு மவுசு குறைந்து வருவதால் நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த ஆண்டு மேலும் 17 பொறியியல் கல்லூரிகளை மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவது உள்ள பொறியியல் கல்லூரிகளில் 800 கல்லுரிகளை  மூட முடிவு செய்துள்ளதாக ஏஐசிடிஇ கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படியாக படிப்படியாக மாணவர்கள் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன.  ஆரம்பத்தில் 600க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்  படிப்படியாக குறைந்து தற்போது 527 கல்லூரிகளே செயல்பட்டு வருகிறது.

பொறியியல் படிப்பிற்கான மோகம் கடந்த சில வருடங்களாக படிப்படியாக குறைந்து வருவதாலும், படித்து விட்டு பல லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பதாலும், தற்போது மேல்நிலைக்கல்வி முடித்துவிட்டு வெளியே வரும்  மாணவ-மாணவிகள் இடையே  பொறியில் படிப்பதற்கான ஆர்வம் குறைந்துவிட்டன.

இந்நிலையில், பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையே நடைபெறாத சூழல் நிலவி வருகிறது. அதன் காரணமாக இந்த ஆண்டும் 17 கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் செயல்பட முடியாது என 12 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூட அனுமதி கேட்டும்,   5 எம்.பி.ஏ. கல்லூரிகளும் தொடர்ந்து செயல்படும் வகையில் விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த கல்வி ஆண்டில் 17 பொறியியல் சார்ந்த கல்லூரிகள் மூடப்படும் அவலம் தொடர்ந்து வருகிறது.