டில்லி

ந்த வருடம் மட்டும் 91,110 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.  அதன்படி ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் செல்லாதவை ஆகின.    இவற்றை மாற்ற வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமம் பட்டனர்.  அப்போது கள்ள நோட்டுக்கள் அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.

அதன் பிறகு புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் வெளியாகின.   இந்த நோட்டுக்களில் போலி நோட்டுக்கள் வெளியாக வாய்ப்புக்கள் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும் புதிய ரூ.200 நோட்டுக்களும் வெளியிடப்பட்டன.   இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த் அறிக்கையின்படி இந்த 2023ஆம் வருடம் மட்டும் ரிசர்வ் வங்கியால் 91,110 போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  இதில் 4.6% நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியிலும் 95.4% நோட்டுக்கள் மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.  இதைத் தவிர 78,699 போலி 100 ரூபாய் நோட்டுக்களும், 27,258 போலி 200 ரூபாய் நோட்டுக்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் இதே அறிக்கையின்படி இந்த ஆண்டு போலி 500 ரூபாய் நோட்டுக்கள் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதே வேளையில் வங்கித் துறையில் கண்டறியப்பட்ட மொத்த போலி நோட்டுக்களின் எண்ணிக்கை இந்த நிதியாண்டில் 2,30,971இல் இருந்து 2,25,780 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.