டில்லி

ந்த முறை நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

நாடாளுமன்ற மக்களவையில் வண்ண புகைக்குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்யக்கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையொட்டி நேற்று முன் தினம் வரை அமளியில் ஈடுபட்ட 97 மக்களவை உறுப்பினர்களும், 46 மாநிலங்களவை உறுப்பினர்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை நேற்று காலை கூடியவுடன் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் கையில் பிடித்தபடி அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

சபாநாயகர் ஓம் பிர்லா ,அப்போது தீபக் பைஜ், டி.கே.சுரேஷ், நகுல்நாத் ஆகிய 3 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட்டு, எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது அவர்,

“நான் காரணமின்றி எந்த நாடாளுமன்ற உறுப்பினரையும் இடைநீக்கம் செய்தது இல்லை. நீங்கள் காகிதங்களைக் கிழித்து வீசுகிறீர்கள். என்னிடம் வந்து, இடைநீக்கம் செய்யுமாறு கேட்கிறீர்கள். சபைக்கு பதாகைகளைக் கொண்டு வருகிறீர்கள். இது சரியல்ல”

என்று கூறினார்.

பிறகு தீபக் பைஜ், டி.கே.சுரேஷ், நகுல்நாத் ஆகிய 3 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்குக் குந்தகம் விளைவித்ததால் இடைநீக்கம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்து அத்தீ0ர்மானம் நிறைவேறியதால், 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இம்முறை, இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவை  உறுப்பினர்கள் எண்ணிக்கை 100 ஆகி இரு அவைகளிலும் மொத்தம் 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.