நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
திகாரவர்க்கத்தின் உச்சகட்ட திமிர் இது. திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்..
நாடு சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை கொண்டாட போகிறது. சுதந்திர இந்தியாவில் மாநிலங்களைப் பொறுத்தவரை பொருத்தவரை எவ்வளவோ மாற்றங்கள். ஆனால் இன்றுவரை மாறவே மாறாமல் கடைசிவரை குழப்பத்திலேயே இருக்கும் எதற்குமே உருப்படாத சனியன் என்றால் அது தமிழக அரசின் நிலங்கள் பராமரிப்பு விவகாரம்தான்.
சாம்பிளுக்கு அண்மையில் வெடித்திருக்கும் இரண்டு விஷயங்களை பார்ப்போம்.
சென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ள குயின்ஸ்லேண்ட் என்ற பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலம் முழுவதும் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்றும் அதனால் அதனை காலி செய்ய வேண்டும் என்றும் அறநிலையத் துறை கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று இந்த நோட்டீஸ் செல்லாது என்று பல மாதங்களுக்கு பிறகு அண்மையில்தான் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
அதாவது சர்ச்சைக்குரிய குயின்ஸ்லேண்ட் இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானதா அல்லது வருவாய் துறைக்கு சொந்தமானதா என்ற விவகாரம் வருவாய் நில நிர்வாக ஆணையர் முன் இருப்பதால் அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் அம்பேல் ஆனது.
நன்றாக கவனியுங்கள். இடம் யாருக்கு என்று சொந்தமானது என்று வழக்கு நடைபெறவில்லை. சாதாரண நோட்டீஸ் தான் அனுப்பப்பட்டது. அதன் மீதான தலையெழுத்தை தெரிந்து கொள்வதற்கே, இத்தனை மாதங்கள். சரி போகட்டும். ஒரு இடம் எந்த துறைக்கு சொந்தமானது என்பதை கண்டறிவது உலக மகா சமாச்சாரமா? நில நிர்வாக ஆணையர் என்ன வருடக்கணக்கில் பரிசோதனைகளை மேற்கொண்டு தடுப்பூசியா கண்டு பிடிக்கப் போகிறார்?
தமிழக அரசின் நிலப் பராமரிப்பின் லட்சணம் இவ்வளவுதான். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக நடந்து வருகிறது என்பதுதான் கொடுமை. மோசடிகளுக்கு உடந்தையாக இருப்பதை தவிர எந்த காலத்திலும் நாங்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று அரசு அதிகார வர்க்கம் வெளிப்படையாகவே சொல்லாதது மட்டுமே பாக்கி.
நேற்று வெடித்திருக்கும் இன்னொரு விஷயத்தை பார்ப்போம்.
சென்னை அடையாற்றின் 6 ஏக்கர் நிலம் எங்களுடையது என்கிறது ப்ளூ நைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற தனியார் நிறுவனம். இதற்காக வருவாய்த்துறை இடம் தாங்கள் பட்டா பெற்றிருப்பதாகவும் அந்த நிறுவனம் சொல்கிறது. இந்த விவகாரத்தில் புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டிருக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை, 1940 ஆம் ஆண்டு ரயத்துவாரி சட்டத்தின்படி 35சென்ட் மட்டுமே பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது. அதுகூட விவசாய பயன்பாட்டுக்காக தான் என்று சொல்லி தரப்பட்டிருக்கிறது.
ஆனால் இதன் உண்மையான சர்வே 170A காட்டப்படவில்லையாம். 1912ஆம் ஆண்டு ஆவணங்களின்படி சர்வே எண் 170ல் சுமார் 65 ஏக்கர் நிலம் அடையாரின் ஆற்றுப் பகுதி. இப்படி இருந்ததில்தான் விவசாய பயன்பாட்டுக்கு என்று சொல்லி 35 சென்ட் வாங்கி இப்போது 6 ஏக்கர் அளவுக்கு பட்டா வாங்கி இருக்கிறார்கள். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும் அனுமதி பெற்றிருக்கிறார்கள்.
இந்த நிலத்தை ஏராளமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு பட்டா கொடுத்தது வருவாய் துறை தான் என்பது குற்றச்சாட்டு. நிலம் மறு வகைப்படுத்த தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் புகுந்து விளையாடி இருக்கிறது என்கின்றனர் என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
வருவாய்த்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய இரண்டுமே இப்போதுநேரடியாக போதிய ஆதாரங்களுடன் பதில் அளிக்க மறுக்கின்றனர். இங்கே குறிப்பிடப்பட்ட இரண்டு விவகாரங்களிலும் அதிகாரவர்க்கம் நினைத்தால் சில நாட்களில் உண்மையை சொல்ல முடியும். ஆனால் கடைசி வரை விசாரணை நிலுவையில் உள்ளது என்றே காலம் தாழ்த்தி விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.
இதுபோன்ற விஷயங்களில் தப்பு செய்தவன், பணம் படைத்தவன் என்றால் எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும சட்டப்படியான நடவடிக்கைகளை துரத்தி துரத்தி அடித்துக் கொண்டே இருக்கலாம்.
இதே நில விவகாரத்தில் சாமானியனுக்கு எதிராக அரசாங்க தரப்பு ஒரு தப்பு செய்துவிட்டால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள பணம் இல்லை என்றால் அவன் காலத்துக்கும் சாக வேண்டியதுதான்.