கடலூர்:  சிதம்பரம் நடராஜர் கோவிலில்  கனகசபை மீது தேவாரம், திருவாசகம் பாட பக்தர்களுக்கு அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், அங்கு  காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சிதம்பரம் கோவிலை கையகப்படுத்த தமிழகஅரசு முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து, கோவில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. ஆனால், இதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க மறுத்தனர்.

இதற்கிடையில், கனகசபை மீது ஏறி வழிபட தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யவும், சபையில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என அரசாணை பிறப்பித்தது. அதன்படி,  ஒவ்வொரு கால பூஜை முடிந்த பின்பும், முதல் 30 நிமிட நேரத்திற்கு தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடவும்,  திருக்கோயில் நிர்வாகத்தை அணுகவும் பக்தர்களை அரசாணைப்படி அனுமதிக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இந்து அறநிலையத்துறை ஆணையர், கோயில் தீட்சிதர்களின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, சிதம்பரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க கடலூர் ஏடிஎஸ்பி அசோக் குமார், 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் வெளிப்பிரகாரம் மற்றும் உட்பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.