‘’எங்க ஏரியா …கிட்ட வராதே’ ’ தடை விதிக்கும் மம்தா.. தகர்க்கும் பா.ஜ.க.

ரசியல் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதலிடம் வகிப்பது-மே.வங்காளம். இன்று ..நேற்று அல்ல…30 -35 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உருவான இந்த வன்முறை கலாச்சாரம் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில்  அதிகரித்தது. இன்றைய மம்தா ஆட்சியில் உச்சம் தொட்டு நிற்கிறது.

உயிருக்கு பயந்து அங்குள்ள காம்ரேட்கள், பா.ஜ.க.வில் பெருவாரியாக சேர்ந்து விட்டனர். மத்தியில் பா.ஜ.க.ஆட்சியில் இருப்பதால் உயிருக்கு ‘மினிமம் கேரண்டி’உண்டு என்பதே இதற்கான காரணம்.

மம்தா காங்கிரசில் இருந்த போது,அந்த மாநிலத்தில் இடதுசாரிகளும், காங்கிரசாரும் மட்டும் தான்  இருந்தனர். மம்தா, காங்கிரசை  உடைத்து திரினாமூல் காங்கிரஸ் ஆரம்பித்த பின் –அந்த இரண்டு பழைய கட்சிகளும் காணாமல்  போய்விட்டன.

மம்தாவுக்கு போட்டி பா.ஜ.க.மட்டுமே.

உ.பி. உள்ளிட்ட இந்தி’’ பெல்ட்’’களில் இந்த முறை ஏற்படும்  இழப்புகளை மே.வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து கிடைக்கும்  கூடுதல்  இடங்கள் மூலம் சரி செய்து கொள்ளலாம் என்பது பா.ஜ.க. கணக்கு.

பா.ஜ.க.வின் கணக்கு தனது பிரதமர்  கனவை சிதைத்துவிடும் என்பதால் மே.வங்கத்தில், பா.ஜ.க.தலைவர்கள் நுழைய அரசு எந்திரங்கள் மூலம் தடை போட்டு வருகிறார் மம்தா.

ஜனவரி 22 ஆம் தேதி அங்குள்ள மால்டா விமான நிலையத்தில் பா.ஜ.க.தலைவர் அமீத்ஷாவின் ஹெலிகாப்டர் இறங்க  ஆட்சியர் அனுமதி மறுத்தார் .’’ஓடுபாதை மோசமாக உள்ளது’’ என்று காரணம் சொன்னார்.

வேறு வேறு காரணங்களை காட்டி மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்.  ம.பி.முன்னாள் முதல்வர் சவுகான் உள்ளிட்டோரின் ஹெலிகாப்டர்கள் இறங்கவும் தடை விதித்தனர் அதிகாரிகள்.

‘இந்த தடை வாக்காளர்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று கொடுக்கும்’’ என்று பா.ஜ.க .மேலிடம் நம்புகிறது.

கடந்த தேர்தலில் இந்த மாநிலத்தில் 2 இடங்களை மட்டுமே பா.ஜ.க.பெற்றிருந்தது. இந்த தேர்தலில் 9 தொகுதிகள் கிடைக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த  எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே மேலிட த்தின் உத்தரவு. அதை நிஜமாக்க ஹெலிகாப்டர் பயணங்களை துறந்து சாலை மார்க்கமாக மம்தா கோட்டைக்குள் சென்று வருகிறார்கள் –பா.ஜ.க.தலைவர்கள்.

—பாப்பாங்குளம் பாரதி