நிதின் கட்காரியை கொண்டாடும் காங்கிரசார்: நேற்று ராகுல்—இன்று சோனியா.. பின்னணி என்ன?

லைகீழாக நின்றாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அடித்து சொல்லி விட்டார்கள்.கிட்டத்தட்ட காங்கிரஸ் கதையும் அதுதான்.

எனவே தேர்தலுக்கு பிந்தைய நிகழ்வுகளை முன் கூட்டியே உணர்ந்து –   புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது-காங்கிரஸ்.

காங்கிரசின் பிரதான எதிரி- மோடிதான்.நேரு குடும்பத்தை வழக்கு விவகாரங்களில் சிக்க வைத்துக்கொண்டிருப்பவர் அவர் தான் என்பதால் –பா.ஜ.க.வில் இருந்து அவரை தனிமைப் படுத்தும் வேலையை தொடங்கி விட்டது-காங்கிரஸ்.

பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-மோடியின் செயல்பாடுகளால் எரிச்டைந்து உள்ளது. நிதின் கட்காரியை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னெடுத்துசெல்லும்  வேலைகளை அந்த அமைப்பு தொடங்கியுள்ள நிலையில்-

நிதின் கட்காரியை பா.ஜ.க.வின் நிஜ ஆண்மகன் என்ற ரீதியில் பாராட்டினார்-ராகுல்.

சில தினங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் நிதினுக்கு-ஐஸ் மழை பொழிந்திருந்தார்-ராகுல்.

‘’வாழ்த்துகள் கட்காரி ஜி. பா.ஜ.க.வில் துணிச்சலான ஒரே ஒரு ஆள் நீங்கள் தான்’’என்று கொழுத்திப்போட- தர்மசங்கடமான சூழலுக்கு ஆளான நிதின்‘’ எனக்கு நீங்கள் சான்றிதழ் தர தேவை இல்லை’’என்று பொய்க்கோபம் காட்டினார்.

அதே போன்றதொரு நிகழ்வு  நேற்று மக்களவையில் அரங்கேறியுள்ளது.

நெடுஞ்சாலை அமைச்சரான நிதின் , தனது துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு அமர்ந்தார். அப்போது எழுந்து பேசிய பா.ஜ.க. எம்.பி.கணேஷ் ‘மந்திரியாக நிதின் பல அற்புத சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு  இந்த அவை பாராட்டு தெரிவிக்க வேண்டும் கூறி விட்டு அமர்ந்தார்.

அப்போது ,அவையில் இருந்த சோனியா புன்னகை சிந்தியபடி, நிதின்  கட்காரியை பாராட்டும் முகமாக மேஜையை தட்டி  குதூகலிக்க- மற்ற காங்கிரஸ் எம்.பி.க்களும் மேஜையை தட்டி பாராட்டினர்.

‘’மேலோட்டமாக பார்த்தால் இது –சாதாரண நிகழ்வாக தெரியலாம். இதன் பின்னணியில் அரசியலும் உள்ளது. பா.ஜ.க.கூட்டணி  வரும் தேர்தலில் 200 க்கும் குறைவான இடங்களில் வென்றால் பிரதமர் வேட்பாளராக நிதினை அறிவித்து எதிர்க்கட்சிகள்  ஆதரவை பெற பா.ஜ.க.திட்ட மிட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டமே , பா.ஜ.க.எம்.பி.யின் திட்டமிட்ட பேச்சும், சோனியாவின் பாராட்டும்’’ என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில்.

—பாப்பாங்குளம் பாரதி