திருச்சி: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கள் நேரு, சேகர்பாபு பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 4-வது திவ்ய தேசம் ஆகும். கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் பெரிய பிரகாரத்தின் தென்பகுதியில் உள்ள கல் அறைகளில் ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும். உய்யக்கொண்டார் எங்களாழ்வானின் அவதாரத் தலம். திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். சோழ நாட்டு நான்காவது திருத்தலம்.
இந்த கோவிலின் ராஜகோபுரம் கட்டுமான தொடங்கப்பட்டு முற்றுபெறாமல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதையடுத்து, ராஜகோபுரத்தில் விடுபட்ட 5 நிலைகள் கட்டுவதற்கு அறநிலையத்துறை தயாரானது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி கோரப்பட்டது. இதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, ரூ.7.85 கோடி மதிப்பில் ராஜகோபுர கட்டுமான பணி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மாவட்டம் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருகோவிலில் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டும் பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் .சேகர்பாபு மற்றும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இணைந்து அடிக்கல் நாட்டினர். அவர்களுடன் திருச்சி மேயர் அன்பழகன், அரசு அலுவலர் கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.